யாவரும் கேளிர்

ஈழத்துப் பரணி பாடும் நாளை எதிர்பார்த்து…

இன்று சென்னையில் நடந்து முடிந்த ‘டெசோ’ அமைப்பின் இலங்கை தூதரகம் “முற்றுகையிடும் போராட்டம்”, அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்துவரும் ஈழத் தமிழர் தொடர்பான போராட்டங்களில் அளவில் பெரியதாக காணப்பட்டது. ‘முடிக்குரிய இளவல்’  மு க ஸ்டாலின் மடிப்பு குலையாத வெள்ளை சட்டையுடன் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்படும் புகைப்படங்களை இணையம் எங்கணும் காணக்கூடியதாக உள்ளது.

2008 இன் இறுதியிலும் இது போன்ற எழுச்சி தமிழகத்தில் காணப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக கலைஞர் கருணாநிதியின்  மனித சங்கிலி போராட்டம் அந்த எழுச்சியின் உச்சப் புள்ளியாகவும்  அமைந்துவிட்டது. கலைஞரின், தி மு க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி துறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட கிழமையில் வெளிவர இருந்த ஒரு பேப்பர் இற்கு எழுதிய கட்டுரையில், கலைஞரின் கல்லக்குடி வீரம் மீண்டு வந்ததாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தேன், பத்தாததற்கு கட்டுரையின் ஆரம்பத்தில் சு வில்வரத்தினத்தின் கவிதை வேறு. தமிழக அரசியலில் கோபாலபுரத்து குடும்பம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கிய பொழுதும், ஈழத் தமிழர் தொடர்பாக கலைஞர் தனது வரலாற்று கடமையை ஆற்றுவார் என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பே அவ்வாறு என்னை அன்று எழுத வைத்தது. அதிர்ஷ்டவசமாக, ஒரு பேப்பர் காரர்கள் நிதிச் சுற்றோட்டப் பிரச்சினை காரணமாக இரண்டு கிழமைகளுக்கு பத்திரிகை அச்சிட முடியவில்லை. அதற்கிடையில் கலைஞர் தனது அரசியல் நாடகத்தை சோனியா மற்றும் மன்மோகன்சிங் உடன் சமரசத்துடன் முடித்துக் கொண்டு விட்டார். ஒரு பேப்பர் ஆசிரியரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, நிலைமை மாறிவிட்டது திருத்தி எழுதும்படி. தமிழக அரசியலை பற்றி எழுதுவதே வீணான வேலை என்று முடிவுக்கு வந்து, தலைவர் உள்ளே வரவிட்டு அடிக்கப் போகின்றார் என்று ‘வன்னிக்கள ஆய்வு’ செய்து கட்டுரை எழுதி முடித்திருந்தேன்.

அண்மைக்காலமாக புத்தெழுச்சி பெற்று வரும் தமிழக அரசியல் நிலவரம், மீளவும் ஒரு சிறிய எதிர்பார்ப்பை என்னுள் உருவாக்கியுள்ளதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், ஒரு முறை சூடு கண்ட பின்னர், தொடக்கத்தில் கவிதை எல்லாம் போட்டு கட்டுரை எழுத தயாரில்லை. இதற்கு காரணம், தமிழக அரசியல் ஆனது, ஈழத் தமிழர் போராட்டம் தொடர்பாக ஒரு தெளிவான விளக்கப் பார்வை கொண்டதாக தெரியவில்லை என்பதாகும்.

சில வாரங்களுக்கு முன்னர், தி மு க குஷ்பூ சர்ச்சை தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் “இன்னொரு மணியம்மை” என்று ஒரு முகப்பு கதையுடன் வெளி வந்தது. எனது பிரச்சினை என்னவென்றால், இந்த செய்தியின் உண்மை - பொய்மை பற்றியதல்ல, மாறாக வாரிசு அரசியலால் நாற்றமடிக்கும் தமிழக அரசியலில் குஷ்பூ வந்து தான் வாரிசு அரசியலை கேள்விக்கு உட்படுத்த வேண்டிய சூழலில் தமிழக அரசியல் பொது வெளி காணப்படுகின்றமை ஆகும்.  வாரிசு அரசியலை கேள்விக்கு உட்படுத்தாத தமிழக வெகுசன ஊடகங்களின் அடிமைத்தனமான போக்கு உள்ள சூழலில், எவ்வாறு அவ்வூடகங்கள் ஈழத் தமிழர் தொடர்பாக ஒரு காத்திரமான பங்களிப்பை அளிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியும். மிகவும் பிற்போக்கான தமிழக அரசியல் கலாச்சாரம் முதலில் மாற்றப்பட்டாலே, ஈழத் தமிழர்களுக்காக அதனால் எதுவும் செய்வதைப் பற்றி சிந்திக்க முடியும். கலைஞரின் இரண்டு மணி நேர உண்ணாவிரதத்தை ஏற்றுகொள்ளும் பக்குவத்தில் தமிழக அரசியல் பொதுவெளி உள்ள சூழலில், என்னால் பெரிதாக எதனையும் தமிழகத்திலிருந்து எதிர்பார்க்க முடியவில்லை.

தமிழக செயற்பாட்டாளர்கள் முதலில் தமிழக அரசியலை மாற்றியமைக்க வேண்டும், புலம்பெயர் மக்களை மாவீரர் நாளுக்கு இன்ன இடத்திற்கு செல்லும்படியோ அல்லது ஜெனீவாவிற்கு பேரணிக்கு செல்லும்படியோ, காணொளியில்  தோன்றி அறிவுரை செய்வதை நிறுத்தி விட்டு, தமிழக அரசியலை புனர் நிர்மாணம் செய்வது பற்றி கவனம் செலுத்த வேண்டும். தீக்குளிப்பு என்பது ஒரு அரசியல் போராட்டத்தின் அங்கமாக இருக்க முடியாது, தயவு செய்து அவ்வாறான போராட்டங்கள் மூலமாக உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்த்து கொள்ளவும்.

ஈழத் தமிழர் தொடர்பில் தமிழகம் பேரெழுச்சி கொள்ளும் என்ற ஒரு நப்பாசை இன்றும் எனக்குண்டு, அவ்வாறான ஒரு பேரெழுச்சிக்கு பரணி பாடுதலும் தகும்.